ஒரு துரோகம்! ஒரு சிரிப்பு-சிறுகதை

ஒரு துரோகம்! ஒரு சிரிப்பு-சிறுகதை

 Author: மகிழம் பூ  Publisher: Magifm  Published: July 10, 2026 More Details
 Description:

  1. முகம் அறியா மோகினி

சென்னையின் அந்தப் பரபரப்பான மாலை நேரத்திலும், ரவியின் அறை மட்டும் ஒரு தனித் தீவு போல அமைதியாக இருந்தது. ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்திம சூரியனின் வெளிச்சம் மெல்ல மறைந்து, நீல நிற இருள் சூழத் தொடங்கியிருந்தது. ரவி தன் மொபைல் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கடந்த மூன்று வருடங்களாக அவனது உலகம் அந்த 6 அங்குலத் திரைக்குள் தான் சுருங்கிப் போயிருந்தது. அதை பார்த்து மெல்ல  புன்னகித்துக் கொள்வான், ஒளிதிரையை பார்த்து பரபரப்படைவான், டென்ஷன் ஆவான் கோபப்படுவான் மீண்டும் சிரிப்பான். அவனுடைய மொத்த உலகமும் அந்த சின்ன ஒளித்துறைக்குள் கரைந்து போனதை அவன் உணரவே இல்லை.

“நிலா…” அவனது உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.
அவள் வெறும் பெயர் மட்டுமல்ல, ரவிக்கு அவள் ஒரு உயிர். மூன்று வருடங்களுக்கு முன்னால், ஒரு மழை பெய்த பின் இரவில் முகநூலில் அவன் பதிவிட்ட கவிதைக்கு அவள் இட்ட அந்த முதல் ‘லைக்’ தான் எல்லாவற்றிற்கும் தொடக்கம்.
அன்று இரவு நிலாவிடமிருந்து வந்த முதல் மெசேஜ் ரவியின் நினைவுக்கு வந்தது: “உங்கள் கவிதையில் ஒரு வலி இருக்கிறது ரவி… அது எனக்கும் பரிச்சயமானது!”
அங்கிருந்து தொடங்கியது அவர்களின் உரையாடல். தினமும் மணிக்கணக்காக சாட்டிங், வார இறுதியில் நீண்ட நேரத் தொலைபேசி அழைப்புகள். ஆனால், ஒருமுறை கூட அவள் தன் புகைப்படத்தை அனுப்பியதில்லை.
“ஏன் நிலா, உன் முகத்தை ஒருமுறை  நான் பார்க்கக் கூடாதா? உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கிறது,” என்று அவன் பலமுறை கேட்டிருக்கிறான்.
அதற்கு அவள் சிரித்துக்கொண்டே சொல்லும் பதில் இதுதான்: “ரவி, முகத்தைப் பார்த்தால் காதல் தேய்ந்துவிடும் என்று சொல்வார்கள். நாம் ஆன்மாவால் இணைந்திருக்கிறோம். என் குரல் உனக்குத் தெரியும், என் எழுத்து உனக்குத் தெரியும். இது போதாதா? ஒருநாள் நானே உன்னைத் தேடி வருவேன். அன்று நீயே ஆச்சரியப்படுவாய்.”
அவள் சொன்ன அந்த ஆச்சரியமான நாள் இன்றுதான். நேற்று இரவு 11:45-க்கு அவள் அனுப்பிய மெசேஜ் ரவியை உறங்க விடவில்லை.

“நாளை இரவு 9 மணி. சென்னையைத் தாண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘தி மூன்லைட் கஃபே’. நான் அங்கே உனக்காகக் காத்திருப்பேன் ரவி. அதே நிலவு வெளிச்சத்தில், மௌனமான அந்தத் தருணத்தில் நாம் முதன்முதலில் சந்திப்போம். வருவாய் அல்லவா?”
ரவி உடனே பதில் அனுப்பினான்: “நிலா, இதற்காகத் தான் நான் மூன்று வருடங்களாகத் தவம் கிடக்கிறேன். நீ சொல்லும் இடத்திற்கு, நீ சொல்லும் நேரத்திற்கு நான் வருவேன். உனக்காக ஒரு பரிசும் வைத்திருக்கிறேன்.”
“பரிசா? என்ன அது?” என்று அவள் ஆவலுடன் கேட்டாள்.
“அது ஒரு ரகசியம் நிலா. நேரில் சந்திக்கும்போது உன் விரல்களில் அதை நானே அணிவிப்பேன்,” என்று சொல்லிவிட்டு இதயம் மின்னும் எமோஜிக்களைப் பறக்கவிட்டான்.
அந்த உரையாடலை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்த ரவி, தன் மேஜை மீது இருந்த சிறிய வெல்வெட் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதற்குள் ஒரு மெல்லிய பிளாட்டினம் மோதிரம், அதன் நடுவே ஒரு சிறிய வைரம் மின்னிக் கொண்டிருந்தது. ரவியின் ஒரு மாதச் சம்பளம் அது. ஆனால், நிலாவின் அன்பிற்கு முன்னால் அது ஒரு தூசி என்று அவனுக்குத் தோன்றியது.

“நாளை இந்த நேரம்… நீ என் முன்னால் இருப்பாய் நிலா. உன் கண்களைப் பார்த்து ‘லவ் யூ’ சொல்லும் அந்த நிமிடத்திற்காக நான் செத்துச் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
வெளியே நிலவு மெல்ல எட்டிப் பார்த்தது. ரவியின் அறையில் மௌனம் குடி புகுந்தது, ஆனால் அவனது இதயத்தில் ஒரு பெரிய காதல் புயல் வீசத் தொடங்கியிருந்தது.

2: தேடலும் தேடலும்

மறுநாள் காலை ரவிக்கு விடிந்ததே ஒரு புதிய உற்சாகத்தில். அலுவலகத்திற்குச் சென்றாலும் அவனது கவனம் முழுக்கக் கடிகாரத்தின் முட்கள் மீதுதான் இருந்தது.
“என்ன ரவி, இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்க போல?” என்று கேட்டான் அவன் நண்பன் அசோக்.
ரவி புன்னகையை மறைக்க முயன்றான். “ஒன்னுமில்லை அசோக், ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதுதான்.”
“மீட்டிங்கா? இல்லை மேட்டிங்கியா?” என்று அசோக் கிண்டல் செய்ய, ரவி எதுவும் சொல்லாமல் தன் வேலையில் மூழ்கினான்.

மாலை 6 மணிக்கே அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டவன், நேராக ஒரு பெரிய பூக்கடைக்குச் சென்றான். நிலாவிற்கு ரோஜாப் பூக்கள் என்றால் கொள்ளை இஷ்டம் என்று அவளுக்குத் தெரியும்.
“சார், ஒரு ஸ்பெஷல் பொக்கே வேணும். சிகப்பு ரோஜாக்கள் மட்டும் இருக்கணும்,” என்றான் ரவி.
பூக்காரன் அழகாக அடுக்கிக் கொடுத்த அந்தப் பூச்செண்டை வாங்கிக்கொண்டு, தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். இசிஆர் (ECR) சாலையில் பைக் பறந்தது. ஒருபுறம் கடல் காற்று, மறுபுறம் அவனது இதயத்தின் வேகம்.
போகும் வழியெல்லாம் அவனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. நிலா அவனிடம் பேசிய அந்த முதல் போன் கால்… அவளது குரல் எவ்வளவு மென்மையாக இருந்தது! அவள் ஒரு எழுத்தாளர் என்று அவனிடம் சொல்லியிருந்தாள். அவளது கதைகள் எல்லாமே காதலையும், பிரிவையும் பேசும்.

“ரவி, என் கதையில் வரும் ஹீரோ எப்போதும் உண்மையான காதலனாக இருப்பான். உன்னைப் போலத்தான்,” என்று அவள் சொன்னபோது ரவி வானத்தில் பறந்தான்.

திடீரென்று அவனது போன் ஒலித்தது. நிலாவிடமிருந்து மெசேஜ்: “ரவி, நான் ரிசார்ட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நீ கிளம்பிவிட்டாயா? வெள்ளை நிறச் சட்டை அணிந்து வா, அது உனக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”
ரவி உடனே சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டுப் பதில் அனுப்பினான்: “ஆமாம் நிலா, நான் வெள்ளைச் சட்டையில்தான் வருகிறேன். கையில் உன் இதயத்திற்குப் பிடித்த ரோஜாக்களுடன். இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன். என் இதயம் எகிறுகிறது நிலா!”

“பொறுமையாக வா ரவி. நிலவு முழுமையாக வரும்போது நான் உன்னைச் சந்திப்பேன்,” என்று அவள் முடித்தாள்.
ரவி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான். ‘தி மூன்லைட் கஃபே’ – அந்த ரிசார்ட்டின் நுழைவாயிலில் இருந்த பெயர்ப் பலகை மின்னியது. அந்த இடம் மிகவும் அமைதியாக, ஒதுக்குப்புறமாக இருந்தது.

பைக்கை நிறுத்திவிட்டு, தன் சட்டையைச் சரி செய்துகொண்டான். பாக்கெட்டில் இருந்த வைர மோதிரப் பெட்டியை ஒருமுறை தொட்டுப் பார்த்துக்கொண்டான். கையில் இருந்த பூச்செண்டுடன் மெல்ல உள்ளே நடந்தான்.
உள்ளே நுழையும்போதே ஒரு விசித்திரமான மௌனம் அவனை வரவேற்றது. கஃபேவின் வெளிப் பகுதியில் மணல் பரப்பில் மர மேஜைகள் போடப்பட்டிருந்தன. நிலவின் ஒளி அந்த இடத்தையே ஒரு கனவு உலகம் போல மாற்றியிருந்தது. தூரத்தில் கடல் அலைகளின் சத்தம் மெல்லிய இசையாகக் கேட்டது.

ரவி ஒரு மூலையில் இருந்த மேஜையில் அமர்ந்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி 8:55. இன்னும் ஐந்து நிமிடங்கள். அந்த ஐந்து நிமிடங்கள் அவனுக்கு ஐந்து யுகங்களாகத் தெரிந்தன.

3: நிலவின் வருகை

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘தி மூன்லைட் கஃபே’வின் அமைதி ரவியின் இதயத் துடிப்பை அவனுக்கே கேட்கச் செய்தது. ஒவ்வொரு முறை கதவு திறக்கப்படும்போதும், அவன் கண்கள் ஆவலோடு அங்கே நிலைத்தன. அந்த ரிசார்ட்டின் மங்கலான விளக்குகள் நிலவின் ஒளிக்கு வழிவிட்டுத் தங்களை அடக்கிக் கொண்டன.

திடீரென்று, தூரத்தில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஒரு மெல்லிய உருவம் காரிலிருந்து இறங்கி, மெதுவான நடையுடன் கஃபேவின் திறந்தவெளிப் பகுதியை நோக்கி வரத் தொடங்கியது. அவள் அணிந்திருந்த வெள்ளை நிற மெல்லியப் புடவை காற்றில் அலைபாய, அந்த நிலவு வெளிச்சத்தில் அவள் ஒரு தேவதையைப் போலவே தெரிந்தாள்.
ரவி எழுந்து நின்றான். அவனது கைகள் நடுங்கின. “நிலா… இவள்தான் நிலாவா?” அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். அவள் முகம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவளது நடையும், அந்த கம்பீரமும் அவனுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாகத் தெரிந்தது.

அவள் நெருங்கி வந்தாள். ரவி தன் கையில் இருந்த ரோஜாப் பூச்செண்டை இறுக்கப் பிடித்துக் கொண்டான். அவள் மேஜைக்கு மிக அருகில் வந்தபோது, ரவி அவளது முகத்தைப் பார்த்தான். அவன் கற்பனை செய்ததை விடவும் அவள் அழகாக இருந்தாள். பெரிய கண்கள், அதில் ஒரு விதமான தீட்சண்யம்.

“ரவி…” அவள் குரல். அதே குரல். போனில் கேட்டு ரசித்த அதே மென்மையான, ஆனால் ஆழமான குரல்.
“நிலா… என்னால் நம்பவே முடியவில்லை. நீ… நீ நிஜமாகவே என் முன்னால் நிற்கிறாய்!” ரவியின் குரல் தழுதழுத்தது.
நிலா மெலிதாகப் புன்னகைத்தாள். “ஏன் நம்ப முடியவில்லை ரவி? நான் வருவேன் என்று சொன்னேன் அல்லவா? இதோ வந்துவிட்டேன்.”

ரவி மெல்ல பூச்செண்டை அவளிடம் நீட்டினான். “இது உனக்காக நிலா. உன் மனதிற்குப் பிடித்த ரோஜாக்கள்.”
அவள் அதை வாங்கிக் கொண்டாள். ஆனால், அவளது கண்கள் ரவியைப் பார்க்கவில்லை. அவள் எதையோ எதிர்பார்ப்பது போலத் தெரிந்தது.

“நிலா, ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? நான் உனக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று சொன்னேன் அல்லவா?” என்று கூறி, ரவி தன் பாக்கெட்டிலிருந்து அந்த சிறிய பெட்டியை எடுத்தான். அதைத் திறந்து மின்னும் வைர மோதிரத்தைக் காட்டினான்.

“மூன்று வருடங்களாக உனக்காகச் சேர்த்த அன்பு நிலா இது. இதை உன் விரலில் அணிவிக்க எனக்கு அனுமதி தருவாயா?” ரவியின் கண்கள் கெஞ்சின.

நிலா அந்த மோதிரத்தைப் பார்த்தாள். ஒரு கணம் அவளது முகத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி வந்து போனது. தயக்கம்? அல்லது குற்ற உணர்வு? ஆனால் அது ஒரு நொடியில் மறைந்தது. அவள் சிரித்தாள், அந்தச் சிரிப்பு ரவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது.

“ரவி, கொஞ்சம் பொறு. நாம் மட்டும் இங்கே தனியாக இல்லை. உனக்கு இன்னும் சிலரை நான் அறிமுகப்படுத்த வேண்டும்,” என்றாள் நிலா.

ரவி குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். “யார் நிலா? நீ மட்டும் தானே வருவேன் என்று சொன்னாய்?”
அந்தக் கணம், ரிசார்ட்டின் இருண்ட பகுதியிலிருந்து ஒரு நிழல் உருவம் அசைந்தது.

4: நிழல் தந்த நிஜம்

நிலா பின்னோக்கித் திரும்பி, “கௌதம், உள்ளே வாங்க!” என்று அழைத்தாள்.
ஒரு உயரமான, கம்பீரமான இளைஞன் கையில் ஒரு கைக்குழந்தையுடன் வெளிச்சத்திற்கு வந்தான். அவனது முகம் ஒருவிதமான நக்கலோடு ரவியைப் பார்த்தது. ரவி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“நிலா… யார் இவர்? இந்தக் குழந்தை?” ரவியின் குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது.
நிலா அந்தக் குழந்தையை கௌதமிடமிருந்து வாங்கிக் கொண்டாள். குழந்தையின் கன்னத்தைத் தட்டி, “இது தியா குட்டி ரவி. என் மகள். இவன் கௌதம், என் ஹஸ்பண்ட்,” என்று மிக இயல்பாக அறிமுகப்படுத்தினாள்.
ரவியின் கையில் இருந்த மோதிரப் பெட்டி நழுவி மணலில் விழுந்தது. அவனது உலகம் அப்படியே சுழல்வது போல இருந்தது. “ஹஸ்பண்டா? குழந்தையா? அப்போ… அப்போ இவ்வளவு நாள் என்கிட்ட பேசினது? என் காதலை ஏத்துக்கிட்டது? எல்லாம்… எல்லாம் பொய்யா நிலா?”

கௌதம் குறுக்கிட்டுச் சிரித்தான். “பொய் இல்லை ரவி, இது ஒரு ‘ரிசர்ச்’. நிலா ஒரு பெரிய எழுத்தாளர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவளுடைய அடுத்த த்ரில்லர் நாவல் ‘த பாட் ஆஃப் டிசீட்’ (The Pot of Deceit) க்காக ஒரு நிஜமான எமோஷன் தேவைப்பட்டது. ஒருத்தன் எப்படி ஒரு பெண்ணை முகம் பார்க்காமல் காதலிக்கிறான், அவனுக்காக எதையெல்லாம் இழக்கிறான் என்பதை நேரடியாகப் பார்க்க நிலாவிற்கு ஒரு ‘சப்ஜெக்ட்’ தேவைப்பட்டது. நீங்கதான் அந்த சப்ஜெக்ட்!”

ரவி நிலாவையே வெறித்துப் பார்த்தான். அவளது முகத்தில் இப்போது எந்தக் காதலும் இல்லை. மாறாக, ஒரு வேட்டைக்காரி தனது இரையைப் பார்த்து ரசிப்பது போன்ற ஒரு திருப்தி இருந்தது.
“ஏன் நிலா? ஏன் இப்படிச் செய்தாய்? என் உணர்வுகளை வைத்து விளையாட உனக்கு எப்படி மனசு வந்தது? நான் உன்னை உயிராகக் காதலித்தேனே!” ரவி கத்தினான்.

நிலா மெல்லத் தலைசாய்த்துச் சொன்னாள், “காதலா? ரவி, இது பிசினஸ். ஒரு எழுத்தாளருக்கு உணர்வுகள் எல்லாம் கதையின் மூலப்பொருள் மட்டும்தான். நீ எனக்கு அனுப்பிய கவிதைகள், அந்த இரவு நேர அழுகைகள், இப்போது நீ வாங்கி வந்திருக்கும் இந்த வைர மோதிரம்… இது எல்லாமே என் நாவலில் மிக முக்கியமான சீன்ஸ். உண்மையில், நீ இந்த வைர மோதிரம் வாங்குவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது என் நாவலுக்கு இன்னும் ஒரு பெரிய ட்விஸ்ட் கொடுக்கும்.”

அவள் கௌதமைப் பார்த்துச் சிரித்தாள். கௌதமும் அவளை அணைத்துக் கொண்டு, “ப்ரோ, கவலைப்படாதீங்க. நாவல் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கு ஒரு காபி இலவசமா அனுப்புறோம். மறக்காம படிங்க. அதுல உங்க பேரு ‘ரவி’ன்னே தான் இருக்கும்,” என்றான்.

அந்த ரிசார்ட்டின் அமைதியை நிலாவின் அந்தப் பயங்கரமான சிரிப்பு ஆக்கிரமித்தது.

 5: காகிதக் காதல்

அந்த கடற்கரை ரிசார்ட்டின் மணல் பரப்பில் ரவி ஒரு பிணத்தைப் போல நின்றிருந்தான். அவன் காலடியில் விழுந்து கிடந்த அந்த வைர மோதிரம், நிலவின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டு அவனைப் பார்த்துப் பரிகசிப்பது போல இருந்தது. மூன்று வருடங்கள்… தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நிலா என்ற அந்தப் பெயருக்காகத் தாரை வார்த்திருந்தான். ஆனால் இப்போது அவள் ஒரு அந்நியப் பெண்ணாக, தன் கணவன் மற்றும் குழந்தையோடு அவன் முன்னால் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நிலா… உன்னால் எப்படி இவ்வளவு சாதாரணமாகச் சிரிக்க முடிகிறது?” ரவியின் குரல் கரகரப்பாக வெளிவந்தது. “நான் உன்னை ஒரு தேவதையாகப் பார்த்தேன். உன் குரலில் இருந்த அந்த அன்பு, உன் மெசேஜ்களில் இருந்த அந்த ஏக்கம்… எல்லாமே வெறும் நடிப்பா?”

நிலா தன் கையில் இருந்த குழந்தையை கௌதமிடம் கொடுத்துவிட்டு, ரவியின் அருகில் வந்தாள். அவளது கண்களில் இப்போது எந்தக் கனிவும் இல்லை. “ரவி, உனக்கு ஒன்று தெரியுமா? ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படும் மிகப் பெரிய திறமையே ‘உண்மை போன்ற பொய்களை’ உருவாக்குவதுதான். நீ என் குரலில் அன்பைக் கேட்டாய், நான் என் நாவலுக்கான வசனங்களைப் பேசினேன். நீ என் மெசேஜ்களில் ஏக்கத்தைப் பார்த்தாய், நான் என் கதையின் அடுத்த அத்தியாயத்தை டைப் செய்தேன்.”

கௌதம் குறுக்கிட்டான், “ரவி, இதற்காகத் தான் நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தோம். நீங்கள் ஒரு சராசரி மனிதர். உணர்ச்சிகளுக்கு எளிதில் அடிமையாகக் கூடியவர். உங்கள் மூலமாக ஒரு உண்மையான காதலன் எப்படி ஏமாறுவான் என்பதை நாங்கள் மிக நுட்பமாக ஆய்வு செய்தோம். உண்மையில், நிலா எழுதிய ‘த பாட் ஆஃப் டிசீட்’ நாவலின் பாதி ராயல்டி உங்களுக்குத் தான் சேர வேண்டும்!” என்று நக்கலாகச் சிரித்தான்.

ரவியின் கண்கள் சிவந்தன. “இது ஆய்வா? இது வன்கொலை கௌதம்! ஒரு மனிதனின் நம்பிக்கையைக் கொல்வது கொலையை விடப் பயங்கரமானது. நிலா, நீ ஒரு எழுத்தாளர் அல்ல, நீ ஒரு ராட்சசி! என் ஒவ்வொரு சொட்டு அன்பையும் உன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டாயே…”

நிலா கோபப்படவில்லை, மாறாக அவனது வார்த்தைகளை ரசித்தாள். “இந்த ஆத்திரம் தான் ரவி! இந்தச் சீற்றத்தைத் தான் நான் என் நாவலின் கிளைமாக்ஸாக வைக்கப் போகிறேன். ‘ஏமாற்றப்பட்ட காதலனின் கடைசி வார்த்தைகள்’ – இது நாவலுக்கு எவ்வளவு பெரிய விளம்பரம் தெரியுமா?”அவள் குனிந்து மணலில் கிடந்த வைர மோதிரப் பெட்டியை எடுத்தாள். அதைத் திறந்து அந்த மோதிரத்தைப் பார்த்தாள்.

“நிஜ வைரம் தான்! ரவி, நீ இவ்வளவு தூரம் போவானு   நான் நினைக்கவில்லை. இதையும் நான் என் கதையில் சேர்த்துகறேன்’ தன் காதலியின் திருமண வாழ்க்கைக்காகத் தன் கடைசிச் சேமிப்பை வைர மோதிரமாகத் தந்த காதலன்’ – செண்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும்!” என்றாள்.

ரவிக்குத் தலை சுற்றியது. அவன் பார்த்த நிலா எங்கே? அவன் நேசித்த அந்த மென்மையான கவிஞர் எங்கே? இப்போது அவன் முன்னால் நிற்பது ஒரு உணர்ச்சியற்ற இயந்திரம் போலத் தோன்றியது.

6: இறுதிச் சிரிப்பு

இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டிருந்தன. நிலாவும் கௌதமும் காரை நோக்கி நடக்கத் தொடங்கினர். ரவி அங்கேயே சிலையாக நின்றிருந்தான். அவனது இதயம் துடிக்க மறுத்தது.

“ரவி, கிளம்பும் முன் ஒரு விஷயம்,” நிலா காரின் அருகில் நின்று திரும்பிப் பார்த்தாள். “உன் பெயரில் அந்த நாவல் அடுத்த மாதம் அமேசானில் வெளியாகும். மறக்காமல் வாங்கிப் படி. உன்னைப் பற்றி நீயே படித்துத் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு. கௌதம், கிளம்பலாமா?” கௌதம் காரைத் திறந்தான்.

“ப்ரோ, பூக்களை இங்கேயே விட்டுட்டுப் போறோம். உங்க பழைய நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்த அது பயன்படும்!” என்று சொல்லிவிட்டு ஸ்டைலாகக் காரில் ஏறினான்.

கார் ஸ்டார்ட் ஆனது. அதன் ஹெட்லைட் வெளிச்சம் ரவியின் கண்களைக் கூசச் செய்தது. நிலா காரின் ஜன்னல் வழியாகப் பார்த்து ஒரு கடைசிச் சிரிப்பை உதிர்த்தாள். அந்தச் சிரிப்பு ஒரு துரோகத்தின் மொத்த வடிவம். கார் வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. ரிசார்ட்டின் அந்தப் பகுதி இப்போது நிசப்தமானது. ரவிக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. தன் கைபேசியை எடுத்துப் பார்த்தான். அதில் இன்னும் நிலாவின் பழைய மெசேஜ்கள் இருந்தன. “லவ் யூ ரவி”, “உனக்காகத் தான் நான் உயிர் வாழ்கிறேன்” – இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது காகிதப் பூக்களாகத் தெரிந்தன.

அவன் மெல்ல குனிந்து சிதறிக் கிடந்த ரோஜாப் பூக்களைப் பார்த்தான். அவை வாடிப் போயிருந்தன. தன் காதலைப் போலவே. சட்டென்று அவனுக்கு ஒரு விஷயம் தோன்றியது. நிலா அவனை ஒரு கதாபாத்திரமாக மாற்றினாள் என்றால், அவனும் ஏன் அவளை ஒரு கதாபாத்திரமாக மாற்றக் கூடாது?

ரவி தன் மொபைலை எடுத்தான். அவனது முகத்தில் இப்போது ஒரு விசித்திரமான புன்னகை. அது கசப்பான, ஆனால் உறுதியான புன்னகை. அவன்   தன் சொந்த இணையதளத்தில் ஒரு புதிய தொடரைத் தொடங்கப் போவதாக அறிவிக்க முடிவு செய்தான்.

 

 

“வணக்கம் நேயர்களே… நான் ரவி. இன்று உங்களுக்கு ஒரு நிஜமான த்ரில்லர் கதையைச் சொல்லப் போகிறேன். ஒரு எழுத்தாளர் எப்படித் தன் எழுத்துக்காக ஒரு மனிதனின் இதயத்தைப் பிய்த்துப் போட்டார் என்பது தான் அந்தக் கதை. இந்தக் கதையின் நாயகி ‘நிலா’…”

அவன் பேசத் தொடங்கினான். அவனது ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கத்தியைப் போலக் கூர்மையாக இருந்தது. நிலா அவனது வாழ்க்கையை நாவலாக்கினால், அவன் அவளது துரோகத்தை ஒரு சரித்திரமாக மாற்றத் தொடங்கினான். அந்த முழு நிலவு இரவில், ஒரு காதல் தோற்றிருக்கலாம். ஆனால், ஒரு கலைஞன் பிறந்திருந்தான். தன் வலியையே உரமாக்கி, துரோகத்தையே கதையாக்கிச் சொல்லும் ஒரு புதிய ரவி அங்கே உருவானான். நிலாவின் நாவல் வெளிவரும் முன்பே, ரவியின் இந்த ‘நிஜக் கதை’ காட்டுத்தீயாகப் பரவப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை. அந்தத் துரோகத்தின் சிரிப்புக்கு இப்போது ரவியின் பதில் ஒரு மௌனமான சவாலாக இருந்தது.

                                                                                                      முற்றும்.

#ShortStory #ThrillerTwist #Nila #ModernLove #Betrayal #MagiWrites #TrendingStory #TamilWriter #MagiFM-

 Back
error: Content is protected !!