Chinna Pechi – Sirukathai

Chinna Pechi – Sirukathai

 Author: மகிழம் பூ  Publisher: Magifm More Details
 Description:

அதிகாலை நான்கு மணி. ஊரே தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, சின்னபேச்சியின் கண்கள் மட்டும்  உறக்கத்தை தொலைத்திருந்தன. அந்த எழுபது வயது உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த எலும்புகள் ஒவ்வொன்றும் ‘இன்னும் கொஞ்ச நேரம் படு’ என்று கெஞ்சுவது அவளுக்குத் தெரியும். ஆனால், அந்த எலும்புகளுக்குத் தெரியாது, வயிற்றில் எரியும் பசித் தீயை விட, முதுகுவலி பெரிதல்ல என்று.

சின்னபேச்சி மெல்ல எழுந்து, முற்றத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக் கழுவினாள். அவளுடைய முகம் சுருக்கங்கள் கிழிந்த நிலவரைபடம் போல இருந்தது. அந்த ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பின்னாலும்  அவள்  வறுமையின்  வரலாறு ஒளிந்திருந்தது.

தலையில் ஒரு பழைய துண்டைச் சுருட்டி வைத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு கூடையும், கையில் ஒரு பிளாஸ்டிக் வாளியுமாகப் புறப்பட்டாள். அவள் போகுமிடம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் வாய்க்கால் வரப்புகள். அங்கேதான் மருந்தடிக்காத ‘மணத்தக்காளி’யும், ‘முளைக்கீரையும்’ சிரித்துக்கொண்டிருக்கும்.

“வாம்மா சின்னபேச்சி… இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட?” – வாய்க்கால் வரப்பில் மண்கொத்திக் கொண்டிருந்த முனியன் கேட்டான்.

“வயசானாக் தூக்கம் வர மாட்டேங்குதுப்பா… அப்படியே இந்த வயிறு இருக்கே, அதுக்கு நேரம் காலம் தெரியல,” என்று சின்னபேச்சி பற்கள்  போக்கை வாயால் மெலிதாகச் சிரித்தாள்.

கீரையைப் பறிக்கும்போது அவள் கைகள் நடுங்கவில்லை. அது ஒரு தவம் போல இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துப் பறித்தாள். “கீரைங்கறது வெறும் செடி இல்ல, இது சனம் திங்கப்போற மருந்து. அழுக்கு இல்லாம, புழு இல்லாம கொடுக்கணும்,” என்பது அவள் கொள்கை.

 காலை எட்டு மணி. வெயில் மெல்ல ஏறத் தொடங்கியது. சின்னபேச்சி நகரின் முக்கியமான தெருக்களில் கூடையைச் சுமந்தபடி நடந்தாள்.

“கீரை… கீரை..ம்மா.. கீரை” என்று கத்தியப்படியே நடந்தாள்,

“மணத்தக்காளி கீரை… உடம்புக்கு நல்லதுமா… வாங்கிக்கோங்க…”என்று குரல் நடுங்க கூவினாள். குரலில் தளர்ச்சி இருந்தாலும், அதில் ஒரு கனிவு இருந்தது. ஒரு பெரிய வீட்டின் முன் நின்றாள்.   இளம்பெண் ஒருத்தி வெளியே வந்தாள்.

“என்ன பாட்டி,  இன்னிக்கு அதே மணத்தக்காளியா?” என்றாள்.

“ஆமா தாயீ,  உன் குழந்தைக்குப் வாவூரு புண்ணுன்னு சொன்னியே, அதுக்காகவே தேடிப் பறிச்சுட்டு வந்தேன். இதைக் கடைஞ்சு குடு,   ஆறிடும்.” என்றாள்.

அந்தப் பெண் கீரையை வாங்கிவிட்டு ஒரு பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். சின்னபேச்சி அதை வாங்க மறுத்துவிட்டாள். “இல்லம்மா, நேத்து நீ எனக்குக் கொடுத்த காசு மிச்சம்   இருக்கு. இன்னைக்கு இந்தக் கீரைக்குக் காசு வேண்டாம்.   புள்ளை குணமானா அதுவே எனக்குப் போதும்.”

வியாபாரத்தில் நேர்மை என்பது அவள் பள்ளியில் பயின்றதல்ல ; அது அவளது ரத்தத்தில் ஊறியது. தனக்கே சோற்றுக்கு வழி இல்லாத நிலையிலும், அடுத்தவர் பணத்தில் ஒரு பைசா கூட ஒட்டக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

 “உழைச்ச காசு உடம்புல்ல நின்னா போதும்” என்பது தான் அவள் சித்தாந்தம்.
பசியோடு இருக்கும் சிறுவனுக்கு சின்னபேச்சி பாட்டி கஞ்சிப் பொட்டலம் கொடுக்கும் நெகிழ்ச்சியான காட்சி
சிறுவனுக்கு  பாட்டி கஞ்சிப் பொட்டலம் கொடுக்கும்  காட்சி 

 

மதியம் ஒரு மணி. வெயில் மண்டையைப் பிளந்தது. கூடையில் இன்னும் இரண்டு கட்டு கீரை மிச்சமிருந்தது. கால்கள் தள்ளாடின. ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்தாள். காலையில் கட்டிக்கொண்டு வந்த பழைய கஞ்சியைப் பிரித்தாள். ஒரு சின்ன வெங்காயமும், பச்சை மிளகாயும் தான் அவளுக்கு ராஜ விருந்து.

அப்போது அங்கே ஒரு சிறுவன், கிழிந்த சட்டையுடன் பசியோடு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவன் கண்கள் அவளது கஞ்சிப் பொட்டலத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.

சின்னபேச்சிக்குத் தெரியும், அந்தப் பொட்டலம் அவளுக்கே போதாது என்று. ஆனாலும், யோசிக்காமல் அந்தச் சிறுவனை அழைத்தாள். “இங்க வாப்பா… இந்தா, இதைச் சாப்பிடு. பாட்டிக்கு வயிறு நிறைஞ்சிருச்சு,” என்று பொய் சொன்னாள். அவன் பசியோடு உண்பதைப் பார்க்கும்போது, அவளது வயிற்றுப் பசி அடங்கி, மனது நிறைந்தது.

மாலையில் வீடு திரும்பும்போது கையில் இருந்த சில சில்லறை காசுகள் அவளுடைய ஒரு நாள் உழைப்பின் பலன். வீட்டை அடைந்ததும், சுவரில் இருந்த தன் கணவரின் புகைப்படத்தைப் பார்த்தாள்.

“இன்னைக்கும்  சின்னபுள்ளைக்கு உதவியா இருந்தேன்யா… வறுமை என்னை வாட்டுதுதான், ஆனா என் மனசை அது அழுக்காக்க விடல,” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

பழைய கிழிந்த பாயை உதறிப் படுக்கப் போனவளுக்கு, இடுப்பில் சொருகியிருந்த அந்தச் சிறு சுருக்குப் பையின் கனம் உறுத்தியது. அன்றைய சொற்ப வருமானத்தைச் சரிபார்க்கப் பையைத் திறந்தாள். உள்ளே சில ஒரு ரூபாய் நாணயங்களும், அழுக்கான இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும் இருந்தன. ஆனால், அதற்கடியில் மடிக்கப்பட்ட ஒரு காகிதம் தென்பட்டது.

“இது ஏது?” என்று குழப்பத்துடன் அதைப் பிரித்துப் பார்த்தாள்.

அதில் ஒரு நூறு ரூபாய் நோட்டும், கிறுக்கலான கையெழுத்தில் ஒரு சிறிய கடிதமும் இருந்தது. மதியம் அவள் கஞ்சி கொடுத்த அந்தச் சிறுவன் வைத்துவிட்டுச் சென்றது அது.

“பாட்டி, நான் பிச்சைக்காரன் இல்லை. பக்கத்துத் தெருவுல பேப்பர் போடுற பையன். இன்னைக்குக் காலைல என் சைக்கிள் டயர் பஞ்சராகி, வேலையும் போயி, பசில இங்க வந்து உக்காந்திருந்தேன். நீங்க உங்க சாப்பாட்டையே எனக்குக் கொடுத்தப்போதான் தெரிஞ்சது, இந்த உலகத்துல இன்னும் அன்பு சாகலன்னு. இது நான்  சம்பாதிச்சி சேத்து வச்சது. இதை வச்சுட்டு நாளைக்குக் காலைல எனக்கு ஒரு ரெண்டு கட்டு கீரை மட்டும் கொண்டு வந்து குடுங்க பாட்டி. உங்கக் கை கீரைக்கு எங்க அம்மா அடிமை!”

சின்னபேச்சியின் கண்கள் பனித்தன. ஒருவேளைக் கஞ்சிக்குத் தன் கௌரவத்தையே அடகு வைப்பவர்கள் மத்தியில், அந்தச் சிறுவனின் நன்றியுணர்வு அவளை நெகிழச் செய்தது.

வெளியே மழைக்கான அறிகுறியுடன் காற்று பலமாக வீசியது. குடிசை ஓரத்தில் இருந்த மண் வாசனையும், கீரை வாசனையும் கலந்து வீசிய அந்த இரவில், சின்னபேச்சிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த உறக்கம் வந்தது.

மறுநாள் அதிகாலை… அதே நான்கு மணி.

ஊரே தூக்கத்தில் இருக்க, சின்னபேச்சியின் கால்கள் அந்தச் சிறுவனுக்காக இன்னும் உற்சாகத்தோடு வாய்க்கால் வரப்பை நோக்கி நடக்கத் தொடங்கின. வறுமை அவளைத் துரத்தினாலும், அவள் விதைத்த அன்பு அவளுக்கு முன்பே அங்கே அறுவடைக்குக் காத்திருந்தது.

 Back
error: Content is protected !!