ஹலோ மை டியர் கேம் சேஞ்சர்ஸ்! உங்கள் மனதை மயிலிறகு போல வருடக்கூடிய அற்புதமான காதல் கதைகளையும், உங்களை உறைய வைக்கும் மர்மம் நிறைந்த திரில்லர் கதைகளையும் வழங்கிக் கொண்டிருப்பது உங்கள் மகிழ்ம்பூ ஆடியோ நாவல்ஸ்.

வெள்ளை நிற லினன் சட்டை, கசங்கிய ஜீன்ஸ், கையில் ஒரு பழைய ஹெல்மெட். பார்ப்பதற்கு ஒரு சாதாரண டெலிவரி பாய் போலவோ அல்லது நடுத்தர வர்க்கத்து இளைஞன் போலவோ தான் தெரிந்தான் மாயவன். ஆனால், அவனது கண்கள் மட்டும் ஏதோ ஒரு ஆழமான ரகசியத்தை ஒளித்து வைத்திருந்தது.
சென்னையின் பரபரப்பான அந்தச் சாலையில், தனது பழைய ‘புல்லட்’ பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். அவனது ஐபோன் அலறியது. எடுத்துப் பார்த்தான். திரையில் ‘தாரா’ என்று மின்னியது.
“சொல்லு தாரா…” ஒற்றை வரியில் முடித்தான் மாயவன்.
“ஹேய் மாயவா! எங்க இருக்க? இன்னிக்கு நம்ம காலேஜ் மேட் அரவிந்த் என்கேஜ்மென்ட் இருக்குடா. நீ வராம அந்த இடமே போரடிக்கும். சீக்கிரம் கிளம்பி வா!” தாராவின் குரலில் அதிகாரமும், அந்தஸ்தின் மினுக்கும் ஒருசேரத் தெரிந்தது.
மாயவன் லேசாகப் புன்னகைத்தான். “சாரி தாரா, நான் வரல. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.”
“என்ன வேலை? அந்த பழைய பைக்ல சிட்டி முழுக்க சுத்தறதுதானே? மாயவா, நீ நினைச்சா ஒரு நிமிஷத்துல ஒரு லம்போகினியே வாங்க முடியும். ஏன் இப்படி ஒரு ஏழை மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்க? ப்ளீஸ், கம் டு தி பார்ட்டி!” தாராவின் குரலில் எரிச்சல் தட்டியது.
“நடிக்கல தாரா, வாழுறேன். ஆடம்பரத்துல கிடைக்காத அமைதி இந்த சாதாரண வாழ்க்கையில கிடைக்குது. உனக்கு அது புரியாது. வைச்சிரட்டுமா?” பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்தான்.
(மாயவனின் மைண்ட் வாய்ஸ்: ‘பணம் தான் வாழ்க்கைன்னு நினைக்கிற தாராவுக்கு, மனசு தான் வாழ்க்கைன்னு எப்ப புரியும்? அவளுக்குத் தேவை என் காதலா இல்ல என் கம்பெனியோட ஷேர்ஸா?’)
அதே சமயம், சாலையின் மறுபுறம்…
ஒரு சிறிய பூக்கடையின் ஓரம் நின்றிருந்தாள் நந்தினி. வெளிர் நீல நிற காட்டன் சுடிதார், தலையில் மல்லிகைப்பூ, கையில் ஒரு சிறிய பை. அவளது எளிமை அந்தச் சாலையின் ஆரவாரத்தையே மெதுவாக்குவது போல இருந்தது.
“அம்மா, இந்த மல்லிகைப்பூ எவ்வளவு?” நந்தினியின் குரல் தேனாய் ஒலித்தது.
“முப்பது ரூபாய்மா…” அந்தப் பூக்கடைப் பாட்டி சொன்னார்.
நந்தினி தனது பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, ஒரு சிறுவன் வேகமாக ஓடிவந்து அவளது கையைப் பறிக்க முயன்றான். நந்தினி நிலைதடுமாறி கீழே விழப்போன நொடி… ஒரு வலுவான கரம் அவளது தோளைப் பற்றித் தாங்கியது.
சரேலெனத் நிமிர்ந்து பார்த்தாள் நந்தினி. அவளது கண்கள் மாயவனின் கண்களோடு மோதின. ஒரு நொடி உலகம் ஸ்தம்பித்தது போல ஒரு உணர்வு.
“பார்த்து… அடி எதுவும் படலையே?” மாயவன் மென்மையாகக் கேட்டான்.
நந்தினி சட்டென விலகி நின்றாள். “இல்ல… தேங்க்ஸ்.” அவளது குரலில் ஒரு நடுக்கம்.
மாயவன் அந்தச் சிறுவனைப் பிடித்து, “ஏன் தம்பி இப்படி பண்ற? பசிக்குதா?” என்று கேட்டு அவனிடம் நூறு ரூபாயைக் கொடுத்து அனுப்பிவிட்டு நந்தினியைப் பார்த்தான்.
“இந்தக் காலத்துல யாரு இப்படிப் பண்ணுவா? நீங்க ரொம்ப நல்லவர் போல…” நந்தினி தயக்கத்துடன் சொன்னாள்.
“நல்லவனான்னு தெரியல, ஆனா மனுஷனா இருக்க முயற்சி பண்றேன். உங்க பேர்?”
“நந்தினி.”
“உங்க பேர் போலவே நீங்களும் அழகா இருக்கீங்க. நான் மாயவன்.”
நந்தினி புன்னகைத்து விட்டு நகர முயன்றபோது, தாராவின் கார் அந்த இடத்திற்கு வந்து நின்றது. கண்ணாடியை இறக்கிய தாரா, நந்தினியை மேலிருந்து கீழ் வரை ஒரு அருவருப்பான பார்வையுடன் பார்த்தாள்.
“மாயவா! யார் இது?”
“எனக்கு தெரிஞ்சவங்க”
“உன் ஸ்டேடஸ்சுக்கு இந்த மாதிரி ஒரு பொண்ணு கூடவா நின்னு பேசிட்டு இருக்க?” என்று கத்தியவள்,
“உன்கிட்ட பிச்சை ஏதும் கேட்டாளா?” என்று சிரித்தாள், தாராவின் வார்த்தைகள் நந்தினியின் இதயத்தை ஈட்டியாய் துளைத்தது. நந்தினியின் கண்கள் கலங்கின. அதை கண்ட மாயவனின் முகம் சட்டெனச் சிவந்தது.
“தாரா! வாயை மூடு. அவங்ககிட்ட மன்னிப்பு கேளு முதல்ல!” அவன் கர்ஜித்தான்.
“வாட்? நான் மன்னிப்பு கேட்கணுமா? ஒரு லெவல் வேணாமா? ஒரு சாதாரண பொண்ணுக்காக என்கிட்ட இப்படிப் பேசுறியா? உனக்கு என்ன ஆச்சு மாயவா?” தாரா ஆத்திரத்தில் கத்தினாள்.
“தாரா.?” என்று அவன் பற்களை கடிக்க,
நந்தினி, “வேண்டாம்… பரவாயில்லங்க. நான் கிளம்பறேன்.” என்றுவிட்டு அவள் அங்கிருந்து வேகமாக நடந்தாள். மாயவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனதிற்குள் அவள் மீது ஏதோ ஒர் ஈர்ப்பு எழுதுகிறது.
(தாராவின் மைண்ட் வாய்ஸ்: ‘இவன் என்ன அந்தப் பொண்ணுக்காக என்னைத் திட்டுறான்? மாயவன் அம்மாவைக் கைக்குள்ள போட்டுக்கிட்டா, இவன் தானா வழிக்கி வருவான். இந்த மாதிரிப் பிச்சைக்காரப் பசங்களுக்கெல்லாம் இவன் கொடுக்கிற முக்கியத்துவம் எனக்குப் பிடிக்கல!’)
“வா மாயவா, கார்ல ஏறு. ஆண்டி (மாயவனின் அம்மா) உன்னைத் தேடிட்டு இருந்தாங்க. ஒரு முக்கியமான விஷயம் பேசணுமாம்.” தாரா அதிகாரத்துடன் சொன்னாள்.
மாயவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். “நான் என் பைக்லயே வரேன். நீ கிளம்பு தாரா.”
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்தபோது, அவனது கண்கள் நந்தினி சென்ற திசையையே தேடியது. ஒரு பக்கம் பணத் திமிர் பிடித்த தாரா, இன்னொரு பக்கம் அமைதியே உருவான நந்தினி. மாயவனின் வாழ்க்கை ஒரு பெரிய திருப்பத்தை நோக்கி நகரப்போவதை அவன் அப்போது உணரவில்லை.